வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 29 ஜனவரி 2019 (08:58 IST)

கூட்டணி ஓகே; ஆனால் தொகுதிப் பங்கீடு ? – களைகட்டும் திமுக கூட்டணி..

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை ஆரம்பித்து அதில் சில சலசலப்புகள் உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக இந்த முறை பலமானக் கூட்டணியை அமைத்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, மமக, முஸ்லிம் லீக் கட்சிகள் இணையவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. மேலும் இதில் காங்கிரஸுடன் கமலின் மக்கள் நீதி மய்யமும் தொகுதி உள் பங்கீடு செய்து கூட்டணியில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தனது கூட்டணிக் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த துரைமுருகன் தலைமையிலான 6 பேர் கொண்ட குழு ஒன்றை அறிவித்துள்ளது.

அந்த குழு இப்போது கூட்டணிக் கட்சிகளோடு தொகுதிப்பங்கீடு மற்றும் அந்தக் கட்சிகளுக்கான தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பேச்சு வார்த்தை ஆரம்பித்ததில் இருந்து கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழு விழி பிதுங்கி வருகிறதாம். திமுக, கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்குவதற்கான திட்டமிட்டு வைத்திருந்த தொகுதிகள் அல்லாமல் வேறு தொகுதிகளை காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கேட்டுள்ளனவாம். இதனால் திமுக வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ள தொகுதிகள் சிலவற்றை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்க வேண்டிய நிர்பந்தம் உருவாகியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையால் திமுக வேட்பாளர்கள் சிலர் கட்டி வைத்திருந்த மனக்கோட்டை உடைந்து வெறுப்பில் உள்ளதாக திமுக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

பிரச்சனை இத்தோடு முடியாமல் ஒரே தொகுதியினை கூட்டணியில் உள்ள இரண்டுக் கட்சிகள் வேண்டுமெனக் கேட்டு வற்புறுத்துவதாகவும் அதனால் தொகுதியை யாருக்குக் கொடுப்பது என்ற முடிவு இன்னும் எட்டப்படாமலேயே உள்ளதாகவும் தெரிகிறது. இதனால் தொகுதிப் பங்கீடு குறித்த இறுதி முடிவை எடுக்க துரைமுருகனோடு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. விரைவில் தொகுதிப்பங்கீடு குறித்த விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.