15 கூட்டணிக்கு … 25 தனக்கு – திமுகவின் தேர்தல் மாஸ்டர்பிளான்
மக்களவைத் தேர்தலில் திமுக தமிழ்நாட்டின் 40 தொகுதிகளில் 25 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் மீதமுள்ள தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக தலைமையிலானக் கூட்டணியில் காங்கிரஸும் இடம்பெறும் என்பது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக கலைஞர் சிலை திறப்பு விழாவுக்கு ராகுல் காந்தி வந்தபோதே முடிவாயிற்று. அதன் பின் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய முஸ்லீம் லீக் உள்ளிட்டக் கட்சிகளும் இணைய ஆரம்பித்தன. இடையில் பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அது தோல்வியில் முடிந்தது.
இதனால் கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்களை ஒதுக்குவதில் முனைப்புக் காட்டியது திமுக. ஏற்கனவே காங்கிரஸுக்கு 10 தொகுதிகளை ஒதுக்கியதாக அறிவித்தது. அதையடுத்து இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. அதையடுத்து மதிமுகவுக்கு 1 மக்களவை சீட் மற்றும் 1 மாநிலங்களவை சீட் என ஒதுக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முஸ்லீம் லிக்கிற்கு ஒரு தொகுதியும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகளும் ஒதுக்க இருப்பதாகத் தெரிகிறது.
இதில் காங்கிரஸ், முஸ்லீம் லீக், மற்றும் இடதுசாரிக் கட்சிகள் ஆகியவை மட்டுமே தங்களது சின்னங்களில் போட்டியிட இருக்கின்றன. விடுதலை சிறுத்தைகள், மதிமுக மற்றும் பாரிவேந்தர் மற்றும் கொங்கு ஈஸ்வரன் ஆகியோர் திமுக வின் சின்னமான உதய சூரியனிலேயேப் போட்டியிட இருக்கின்றனர். அதனால் அவர்கள் அனைவரும் திமுக உறுப்பினர்களாகவேக் கருதப்படுவார்கள்.
இதன் மூலம் கூட்டணிக் கட்சிகளுக்கு 15 தொகுதிகளும், தங்கள் வேட்பாளர்களுக்கு 20 தொகுதிகளும் தங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிடும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு 5 இடங்களும் என ஒதுக்கியுள்ளது திமுக. தற்போதைய நிலவரப்படி இதுதான் திமுக வின் தேர்தல் பிளான் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.