ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: கோயம்புத்தூர் , திங்கள், 10 ஜூன் 2024 (13:13 IST)

இந்திய அளவில் இந்தியா கூட்டணி அமைய மு க ஸ்டாலின் பெரும் முன்னெடுப்பு- அமைச்சர் முத்துசாமி!

திமுக நடத்தும் முப்பெரும் விழா கோவையில் வரும் ஜூன் 15ஆம் தேதி மாலை கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ளது.
 
இதற்கான ஏற்பாடுகளை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, இன்று அடிக்கல் நாட்டி, பணிகளை ஆய்வு செய்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து நடைபெற்ற 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றது.
 
தமிழக உள்ளாட்சி தேர்தலிலும் வரலாற்று வெற்றி பெற்றது. நடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும், 40க்கு 40 வென்றுள்ளது. இதற்கு முழு காரணமாக இருந்த முதல்வர் மு க ஸ்டாலினுக்கு பாராட்டு விழா. கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா என முப்பெரும் விழா கோவையில் நடைபெற உள்ளது.
 
இந்த பணிகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய  அமைச்சர் முத்துசாமி....
 
இந்திய அளவில் இந்தியா கூட்டணி அமைய  மு க ஸ்டாலின் பெரும் முன்னெடுப்பு எடுத்ததாக தெரிவித்தார். 
 
இதன் விளைவாகவே பாஜக அதிக பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி பலத்துடன் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டது என்றார். கொங்கு மண்டலம் அதிமுக கோட்டை என அவர்கள் சொல்லி வந்தது தகர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 
 
உள்ளாட்சி தேர்தலிலும், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலிலும், மக்கள் திமுகவுக்கு ஆதரவு கொடுத்து மாபெரும் வெற்றி அடைய செய்தது இதற்கு உதாரணம்  என்றார். தமிழக மக்களுக்கும், கொங்கு மக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையேற்று கொடிசியா  மைதானத்தில்  நடைபெறும் இந்த விழாவில், லட்சக்கணக்கில் மக்கள் திரள்வார்கள் என்றார். போக்குவரத்து நெரிசல் இல்லாமல், வாகனங்களை சீராக நிறுத்தும் வகையிலும், முப்பெரும் விழாவிற்கு வரும் மக்களை ஒருங்கிணைக்கும் வகையிலும், தொண்டர்கள் செயல்படுவார்கள் என தெரிவித்தார்.