திமுக அரசு அடக்குமுறைகளை ஏவி கைது செய்து அச்சுறுத்துவது கொடுங்கோன்மை- சீமான்
பரந்தூர் புதிய வானூர்தி நிலையத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த வழங்கியுள்ள நிர்வாக அனுமதியை திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
''பரந்தூர் புதிய வானூர்தி நிலையத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த திமுக அரசு நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டு இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இதனை எதிர்த்து இன்று (24.11.23) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராடிய 13 பேரினை திமுக அரசு அடக்குமுறைகளை ஏவி கைது செய்து அச்சுறுத்துவது கொடுங்கோன்மையாகும்.
பரந்தூரை சுற்றியுள்ள 20 கிராமங்களுக்குட்பட்ட ஏறத்தாழ 4500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வேளாண் விளை நிலங்களையும், நீர் நிலைகளையும், மக்கள் குடியிருப்புகளையும் அழித்து புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு எதிராக கடந்த 486 நாட்களாக தொடர்ச்சியாக அப்பகுதி மக்கள் அறவழியில் போராடி வருகின்றனர். மண்ணுக்கும், மக்களுக்கும் எதிரான அழிவுத் திட்டங்களைத் தொடர்ந்து மக்கள் எதிர்த்து வரும் நிலையில், மக்களின் கோரிக்கையினை மதிக்காமல் வானூர்தி நிலையம் அமைப்பதற்கு எதிராக அறவழியில் போராடிய மக்களை அடக்கி ஒடுக்குவது எவ்வகையில் நியாயமாகும்?
எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்களோடு நிற்பது போல் நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு அதே மக்களினுடைய கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிப்பதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? இதுதான் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கச் செய்கின்ற சமூக நீதியா? நிலங்களை வழங்க மறுக்கும் விவசாயிகளை மிரட்டி திமுக அரசு அச்சுறுத்துவதும், வெளியில் வரமுடியாதபடி காவல்துறையைக் கொண்டு அடைத்து வைப்பதும், கைது செய்து சிறைப்படுத்துவதும் எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும். இதே அடக்குமுறைகள் தொடர்ந்தால் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அப்பகுதி மக்கள் தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசிற்கும், இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசிற்கும் தக்க பாடம் புகட்டுவார்கள்.
ஆகவே, வேளாண் விளைநிலங்களையும், நீர்நிலைகளையும், மக்களின் குடியிருப்புகளையும் அழித்து பரந்தூரில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு நிர்வாக அனுமதி வழங்கி வெளியிட்டுள்ள புதிய அரசாணையை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். மேலும், பரந்தூர் புதிய வானூர்தி நிலையத்திற்கு எதிராகப் போராடும் மக்களைக் கைது செய்யும் போக்கினை திமுக அரசு நிறுத்துவதோடு, தற்போது 13 பேர் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாகத் திரும்பப்பெற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.