விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும்- அண்ணாமலை
''கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குத் தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், அரசு ஏற்கனவே நிர்ணயித்த கால அவகாசம் வரை, விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும்'' என்று தமிழக அரசை பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, கடலூர் மடப்பட்டு இடையிலான மாநில நெடுஞ்சாலை அமைக்க நடைபெறும் நிலம் கையகப்படுத்தும் பணியை எதிர்த்து, நிலத்திற்கு குறைந்த மதிப்பில் விலை நிர்ணயம் செய்ததாகக் கூறி, அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகத் தெரிகிறது.
இந்நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், அதிகாரிகளும், காவல்துறையும், இன்னும் சில வாரங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த கரும்புப் பயிர்களை அடியோடு தரைமட்டமாக்கும் காணொளி பார்த்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர் கதறி அழுவதைக் கூட கண்டுகொள்ளாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை அழித்திருக்கிறார்கள்.
நிலத்தைக் கையகப்படுத்த, மாவட்ட ஆட்சியாளர் இரண்டு மாத காலம் அவகாசம் கொடுத்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், இத்தனை அவசரமாக, கரும்புப் பயிர்களை அழிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? விவசாய நிலங்களில் கான்கிரீட் சாலை அமைத்து நடப்பவருக்கு, விவசாயிகளின் வலி எப்படிப் புரியும்?
உடனடியாக, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குத் தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், அரசு ஏற்கனவே நிர்ணயித்த கால அவகாசம் வரை, விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். என்று தெரிவித்துள்ளார்.