முரசொலி அலுவலகம் முற்றுகையா ? – பாதுகாப்பு கேட்கும் திமுக !
முரசொலி அலுவலகம் இருக்கும் பஞ்சமி நிலம் என்றும் அதை மீட்க அந்த இடத்தை முற்றுகை இடப்போவதாகவும் நாகர் சேனை என்ற அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பஞ்சமி நிலம் குறித்து வெற்றிமாறனின் அசுரன் திரைப்படம் பேசியது. அதைப்பாராட்டி திமுக தலைவர் ஸ்டாலின் பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் எனக் கூற, திமுகவின் முரசொலி அலுவலகம் இருப்பதே பஞ்சமி நிலம்தான் என ஸ்டாலினுக்கு ஒரு யார்க்கரை வீசினார் பாமக நிறுவனர். அதற்கு ஸ்டாலின் மறுப்புத் தெரிவித்து ஸ்டாலின் முரசொலி அலுவலகத்தின் பட்டா பத்திரத்தைக் காட்டினார். மேலும் முரசொலி அலுவலக இடம் பஞ்சமி நிலம் தான் என்று நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார் என்று அறைகூவல் விடுத்திருக்கிறார்.
இந்நிலையில் நாகர் சேனை – மறு உலகப் பேரரசு என்ற அமைப்பு முரசொலி அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகாரில் ‘கடந்த சில நாட்களாக திமுக அதிகாரபூர்வ நாளேடான ‘முரசொலி’ இதழ் அமைந்திருக்கும் இடமானது பஞ்சமி நிலம் என அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் ஒரு பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. அதுகுறித்து, சட்டப்படியான நடவடிக்கைகளை திமுக எடுத்து வருகிறது.
அரசே பஞ்சமர் நிலத்தை பஞ்சமரிடம் மீட்டுக் கொடு. ஐந்து முறை ஆட்சி செய்து பஞ்சமர் நிலத்தை அபகரித்த திமுக முரசொலி அலுவலகம் நாகர் சேனை தலைமையில் முற்றுகைப் போர்’. 18.11.2019 திங்கள் காலை 10 மணிக்கு முரசொலி அலுவலகம் கோடம்பாக்கம்-சென்னை என்னும் அறிவிப்புடன் நாகர் சேனை - மறு உலகப் பேரரசு இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் தனியாருக்குச் சொந்தமான நிலங்களுக்கு எதிராக நடத்திட சட்டப்படியாக அனுமதி இல்லை என்பது தாங்கள் அறிந்ததே. இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் தேவையற்ற சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கு வழிவகுக்கும். எனவே, இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் நடந்திடாமல் தடுத்து, ‘முரசொலி’ அலுவலகத்துக்குக் காவல் துறை தகுந்த பாதுகாப்பு அளித்திட வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.