ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 9 மார்ச் 2019 (09:12 IST)

காங்கிரஸுக்கு எந்த தொகுதிகள் ? – இன்று முக்கிய முடிவு !

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸூக்கான தொகுதிகள் எவை என்பது குறித்து இன்று ஆலோசனை நடத்த இருக்கின்றனர் திமுக- காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தை குழுவினர்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இணைந்து 10 தொகுதிகளைப் பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளிலேயே காங்கிரஸுக்கு மட்டுமே அதிகளவில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக 20 தொகுதிகளிலும் காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கூட்டணிக் கட்சிகள் 20 தொகுதிகளிலும் போட்டியிட இருக்கின்றன. ஆனால் இன்னமும் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் எவை என்பதை திமுக அறிவிக்கவில்லை.

மார்ச் 7 ஆம் தேதியே அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று திமுக காங்கிரஸ் இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இது சம்மந்தமாக நேற்று பேசிய ஸ்டாலின் ‘காங்கிரஸ் கட்சியின் சார்பில் குழு அமைக்கப்படவில்லை. குழு அமைக்கப்பட்டவுடன் நாளை (இன்று) காலை 11 மணியளவில் அதுகுறித்த பேச்சுவார்த்தை நடைபெறும்’ என அறிவித்தார்.

அதையடுத்து நேற்றே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக்கான குழுவை நேற்று (மார்ச் 8) அமைத்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி. குழுவில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இன்று காலை 11 மணியளவில் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அழகிரி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸுடனான பேச்சுவார்த்தை முடிந்தவுடன் அடுத்த கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.