1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 30 செப்டம்பர் 2023 (12:23 IST)

காவிரி பிரச்னைக்கு திமுக, காங்கிரஸ் அரசுகளே காரணம்- வானதி சீனிவாசன்

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் காவிரி பிரச்னையும் வந்து விடுகிறது காவிரி பிரச்னைக்கு திமுக, காங்கிரஸ் அரசுகளே காரணம்  என்று  பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
 

இதுகுறித்து அவர் தன் சமூக வலைதள பக்கத்தில்,

‘’கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் காவிரி பிரச்னையும் வந்து விடுகிறது காவிரி பிரச்னைக்கு திமுக, காங்கிரஸ் அரசுகளே காரணம் கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருந்த காவிரி நதி நீர் பிரச்னை எழவில்லை. காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு வழங்கிய வேண்டிய காவிரி நீரை, பாஜக அரசு வழங்கி வந்தது. அனைத்து மாநிலங்களையும் சமமாக நினைக்கும், தேசிய ஒருமைப்பாட்டில் நம்பிக்கை கொண்ட கட்சி பாஜக என்பதால் இது சாத்தியமானது.

ஆனால், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே காவிரி நீர் பிரச்னையும் பூதாகரமாகி விட்டது. இத்தனைக்கு காங்கிரஸ் கட்சியும், தமிழ்நாட்டை ஆளும் திமுகவும் நீண்டகால நெருங்கிய கூட்டணி கட்சிகள். கர்நாடக காங்கிரஸ் அரசு பதவியேற்பு விழாவுக்கும், இண்டி கூட்டணி கூட்டத்திற்கும் பெங்களூரு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, விமான நிலையத்திற்கு வந்து கட்டித்தழுவி வரவேற்றார் கர்நாடக துணை முதலமைச்சரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான சிவகுமார். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும், முதலமைச்சர் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர்தான். அது மட்டுமல்ல காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, இன்றைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மிகமிக நெருக்கமான நண்பர்கள்தான். காங்கிரஸ் தலைமையுடனான நெருக்கம், காங்கிரஸ் உடனான கூட்டணி, இண்டியா கூட்டணியில் முக்கிய இடத்தில் திமுக இருந்தாலும் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை பெற்றுத்தர முடியவில்லை. பல லட்சம் ஏக்கரில் கருகும் குறுவைப் பயிர்களைக் காப்பாற்ற முடியவில்லை. காங்கிரஸ் கட்சியும், இண்டி கூட்டணியும் கூட்டாட்சி தத்துவத்திற்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு காவிரி பிரச்னையை கர்நாடக காங்கிரஸ் அரசு கையாள்வதே காரணம். தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரையும் திறக்காமல், சில அமைப்புகளை தூண்டிவிட்டு ஆர்ப்பாட்டம், மறியல், முழுஅடைப்பு என பிரச்னையை மேலும் மேலும் பெரிதாக்க, இரு மாநிலங்களுக்கு இடையே பிரிவினையை உண்டாக்க திட்டமிடுகிறார்கள். இதற்கு இரு மாநிலங்களில் ஆட்சியில் உள்ள கட்சிகளே காரணம். இண்டி கூட்டணியில் காங்கிரஸுக்கு அடுத்த திமுகதான் பெரிய கட்சி. 2024 மக்களவைத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், பிரதமர் யார் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் தான் தீர்மானிப்பார்.

ஸ்டாலினே கூட பிரதமர் ஆகும் வாய்ப்பு உள்ளது என்று திமுக முக்கியத் தலைவர்களே பேசி வருகின்றனர். இந்த அளவுக்கு செல்வாக்கு உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் நினைத்தால் தனது நெருங்கிய நண்பர்களான கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவக்குமார் ஆகியோருடன் பேசி, தமிழ்நாட்டிற்கான காவிரி நீரை பெற்று, பிரச்னைக்கு சுமூக தீர்வு காண முடியும். இல்லையெனில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே போன்ற தலைவர்களுடன் பேசி தீர்வு காண முடியும். ஆனால், ஆட்சி அதிகாரத்தில் மட்டுமே கவனம் செலுத்தும், மகனை எப்போது துணை முதலமைச்சராக்கலாம், முதலமச்சராக்கலாம் என்பதை மட்டுமே சிந்திக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டு விவசாயிகள் நலனில் கவனம் செலுத்த நேரமும் இல்லை. மனமும் இல்லை. காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடர்ந்தால் மாநிலங்களுக்கு இடையே பிரிவினைவாத சக்திகள் தலைதூக்கி, மக்களின் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும். எனவே, காங்கிரஸ் தலைவர்களுடன் பேசி, காவிரி பிரச்னைக்கு தீர்வு காண முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.