1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 21 செப்டம்பர் 2020 (12:01 IST)

வேளாண் மசோதா: போராட்ட களத்தில் திமுகவும் கூட்டணி கட்சிகளும் குதிக்க முடிவு!!

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் திமுக மற்றும் தோழமை கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு. 

 
விவசாயிகளுக்கான உற்பத்தி வர்த்தக மற்றும் வணிக மசோதா, விலை உறுதிபாடு மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா, அத்தியாவசிய பொருட்கள் சட்டதிருத்த மசோதாக்கள் எதிர் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களைவையில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாவை எதிர்த்து அகாலிதள அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
 
இந்நிலையில் இந்த மசோதாக்கள் மாநிலங்களவை ஒப்புதலுக்கு வந்தது. இதை எதிர்த்து எதிர்கட்சியினர் பேசிய போதும் வெற்றிகரமாக மத்திய வேளாண்மை துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் விவசாய மசோதாக்களை தாக்கல் செய்தார். இந்த மசோதாவிற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 
 
இதனிடையே சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இது குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் வரும் 28 ஆம் தேதி திமுக மற்றும் தோழமை கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு எடுத்துள்ளது.