திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 30 ஜனவரி 2020 (19:58 IST)

பகிரங்கமாக மன்னிப்பு கேளுங்கள்: ராமதாஸ்க்கு திமுக எச்சரிக்கை!

முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலத்தில் தான் உள்ளது என முதன்முதலாக பிரச்சினையை ஆரம்பித்து வைத்தவர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தான் என்பது தெரிந்ததே. இந்த முரசொலி கட்டிடத்தின் மூலப்பத்திரத்தை காண்பிக்க வேண்டும் என டாக்டர் ராம்தாஸ் வலியுறுத்த அதற்கு திமுக பதிலடி கொடுத்து வந்தது. இதுகுறித்த வழக்கு ஒன்றும் சென்னை நீதிமன்றத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திமுக சமீபத்தில் முரசொலி கட்டிடம் வாடகை கட்டிடம் என அறிவித்ததாக செய்திகள் வெளியானது. இந்த செய்தியை அடுத்து டாக்டர் ராமதாஸ் கூறியதாவது: முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் இயங்குகிறதாமே.... அப்படியானால், அந்த பட்டா வெளியிட்டது, அரசியலில் இருந்து விலகத் தயாரா? என்று சவால் விட்டதெல்லாம்  வழக்கம் போல் வெற்றுச் சவடால் தானா? அரசியல் உலகில் எவ்வளவோ பல்டிகள் அடிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை அனைத்திலும் ஆகச்சிறந்த பல்டி... முரசொலி நிலம் மீதான பழியைத் துடைப்போம் என்று வீர வசனம் பேசி விட்டு, இப்போது நாங்களே வாடகைக்கு தான் இருக்கிறோம் என்று சரண் அடைந்தது தான்?
 
முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் தான் இயங்குகிறது என்பதாவது உண்மையா?  மூலப் பத்திரத்தைத் தான் வெளியிடவில்லை. குறைந்தபட்சம் வாடகை ஒப்பந்தத்தையாவது  முரசொலி நிர்வாகம் வெளியிடுமா? கூடவே  சவால் விட்டவர் அரசியலில் இருந்து விலகுவாரா? அகில இந்தியாவில் மட்டுமல்ல.... ஈரேழு லோகத்திலும் வாடகைக் கட்டிடத்தில் இருந்து கொண்டு உரிமையாளர் சார்பில் அவதூறு வழக்குத் தொடர்ந்த ஒரே கம்பெனி.... நம்ம முரசொலி கம்பெனி தான். வெறும் கையால் முழம் போடுவதில் இவர்களை வெல்ல ஆளே  இல்லை போலிருக்கிறது!
 
டாக்டர் ராமதாஸின் இந்த கருத்துக்கு பதில் கூறிய திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன் அவர்கள், ‘பகிரங்கமாக மன்னிப்பு கேளுங்கள் என்று எச்சரிக்கை விடுத்ததோடு, ‘ராமதாஸ் மீது தனிப்பட்ட முறையில் வைத்துள்ள மரியாதையினால் கேட்டு கொள்கிறேன்’ என்றும் கூறியுள்ளார்.