வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 10 பிப்ரவரி 2020 (15:03 IST)

தேமுதிக கொடி உருவாகிய நாள் – தொண்டர்களுக்கு விஜயகாந்த் உருக்கமானக் கடிதம் !

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

தேமுதிக எனும் கட்சியின் கொடியை உருவாக்கி 20 ஆண்டுகள் ஆனதை நினைவுபடுத்தும் விதமாக அதன் நிறுவனர் விஜயகாந்த் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

விஜயகாந்த் தனது ரசிகர் மன்றங்கள் செய்யும் நல்ல காரியங்களுக்கு அடையாளமாக கடந்த 2000 ஆம் ஆண்டு கட்சிக் கொடியை உருவாக்கினார். அதுவே பின்னர் தேமுதிகவின் அதிகாரப்பூர்வ கொடியாக மாறியது. இந்நிலையில் அந்த கொடி உருவாகி 20 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் ‘2000 ஆம் ஆண்டு நம் கொடி அறிமுகப்படுத்தியவுடன் பட்டி, தொட்டி எங்கும் நம் கொடி பட்டொளி வீசி பறக்கச் செய்து, இதுவரை எந்த கழகமும் கண்டிராத இமாலய வெற்றிக்கு இணையாக, குறுகிய காலத்தில் நம் கொடி அனைத்து கிராமங்களிலும் ஏற்ற செய்த பெருமை நம் தொண்டர்களையே சேரும். 2005 ஆம் ஆண்டு நமது ரசிகர் மன்றம், தேமுதிகவாக மாறிய போதும், ரசிகர் மன்றக் கொடியை கழக கொடியாக மாற்றி, நம் கொடிகள் இல்லாத கிராமமே இல்லை என்ற சாதனை படைத்த தொண்டர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

கொடியில் உள்ள சிவப்பு நிறம் சாதி, மதம், மொழி என நாம் வேறுபட்டாலும், நம் அனைவரின் ரத்தமும் சிவப்பு நிறத்தால் ஒன்றானது என்ற உணர்வால் ஒன்றுபடவேண்டும் என்பதைக் குறிப்பதாகவும், மஞ்சள் நிறம் செல்வமும், வளமும் அனைவருக்கும் சமமாக கிடைத்து, ஒவ்வொருவரின் வாழ்வாதாரமும் சிறப்பாக அமைய வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுவதாகவும், கறுப்பு நிறம் மூடநம்பிக்கை, கெட்ட எண்ணங்கள், வறுமை, நோய், தீவிரவாதம் போன்ற எதிர்மறை நிலையில்லாமல், நாடு சிறக்க வேண்டும் என்பதை குறிப்பதாகவும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அதுபோலவே அனைவரின் வாழ்விலும் பிரகாசமான ஒளி பரவி நாட்டுக்கும், வீட்டுக்கும், நல்லது நடக்க வேண்டும் என்பதை குறிப்பதற்காக நீல நிற ஜோதி உள்ளது

இந்த இருபது ஆண்டுகளில் எத்தனையோ வெற்றிகளையும், தோல்விகளையும், துரோகங்களையும், சூழ்ச்சிகளையும், சோதனைகளையும் சந்தித்த போதும், எதற்கும் மனம் தளராத என் படை தளபதிகளாக இருப்பவர்களே என்னுடன் உறுதுணையாக, நம்பிக்கையாக, பக்கபலமாக இருக்கிறார்கள்.இவர்களால் தான் என்றுமே நமது கழகம் வீறுகொண்டு வெற்றிநடை போட்டு வருகிறது.

இனிவரும் காலங்களிலும் லஞ்சம், ஊழலற்ற, நேர்மையான, தைரியமான, அனைவருக்கும் சமமான வாழ்வு அளிக்கும் நம் தமிழகத்தை உருவாக்க வீறுநடை போடுவோம். எந்த நோக்கத்திற்காக நம் கொடி அறிமுகப்படுத்தப்பட்டதோ, நம் கட்சி ஆரம்பிக்கப்பட்டதோ, அந்த இலக்கை நோக்கி நாம் அசுர பலத்துடன் உழைத்து வெற்றி பெறுவோம்.’ எனத் தெரிவித்துள்ளார்.