தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! – எங்கிருந்து? எப்போது?
தீபாவளிக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர உதவும் விதத்தில் சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளிக்கு ஊர்களுக்கு சென்று வர மக்களுக்கு வசதி செய்யும் வகையில் சென்னையிலிருந்து திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருச்சி என பல பகுதிகளுக்கும் செல்லும் ரயில்களுக்கான முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பே தொடங்கியது. ஆனால் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்தி டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.
மேலும் பேருந்துகளிலும் சிறப்பு முன்பதிவுகள் பல ஆயிரத்தை தாண்டி போய் கொண்டிருக்கிறது. இதை கருத்தில் கொண்டு தென்னிந்திய ரயில்வே அக்டோபர் 21, 22, 23 ஆகிய தேதிகளில் தாம்பரம் – திருச்சி இடையே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இதே வழிதடத்தில் மீண்டும் 30ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும்.
அதேபோல அக்டோபர் 20, 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தாம்பரம் – நெல்லை வழித்தடத்திலும், அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் – தாம்பரம் வழித்தடத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னிந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
தீபாவளிக்கு ஏற்கனவே ரயில்கள் மற்றும் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ள நிலையில் முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு இந்த சிறப்பு ரயில்கள் உதவியாக இருக்கும் என தென்னக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.