வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 23 ஜூலை 2024 (17:00 IST)

ஏமாற்றம் அளிக்கும் மத்திய பட்ஜெட்.! தமிழ்நாடு மீது பாஜகவுக்கு காழ்ப்புணர்ச்சி.! இபிஎஸ் விமர்சனம்.!!

edapadi
மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
 
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இதில் தமிழகத்திற்கான  புதிய திட்டங்களும், நிதி ஒதுக்கீடு தொடர்பான எந்த அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஒட்டு மொத்த இந்தியாவையும் சமநிலையுடன் ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட் இல்லை என்று விமர்சித்தார்.

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று அவர் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் பாஜக அளித்த வாக்குறுதிகள் மத்திய பட்ஜெட்டில் இடம் பெறவில்லை என்றும் வருமான வரி விகிதத்தில் மாற்றம் வரும் என்று எதிர்பார்த்து இருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். கோதாவரி காவிரி இணைப்பு குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லாதது வருத்தம் அளிக்கிறது என்றார்.
 
தமிழ்நாடு மீது பாஜகவிற்கு காழ்ப்புணர்ச்சி என தெரிவித்த எடப்பாடி, மத்திய அரசின் பட்ஜெட், பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களை திருப்திபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். காய்கறி சாகுபடி தொடர்பாக நிதி அமைச்சர் அறிவிப்புகள் மூலம் விவசாயிகள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்காது என்று அவர் கூறினார்.

 
மேலும் வெள்ள தடுப்பு பணிக்கு அசாம், பீகார் மாநிலங்களுக்கு பெருந்தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாட்டுக்கான வெள்ள தடுப்பு திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்றும் தமிழ்நாட்டுக்கு எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்பது தமிழ்நாட்டின் மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காட்டுகிறது என்றும் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.