வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 9 அக்டோபர் 2024 (18:06 IST)

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த விசிக: மது ஒழிப்பு மாநாடு குறித்து திண்டுக்கல் சீனிவாசன்..!

மது ஒழிப்பு மாநாடு நடத்தியதன் மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார் என அதிமுகவின் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக அரசை கண்டித்து மதுரையில் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்த நிலையில், இந்த போராட்டத்தை திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசிய போது, திமுக அமைச்சர்களிடம் பணம் பெற்று தான் மது ஒழிப்பு மாநாட்டையே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நடத்தினார் என்றும், திமுக செலவில் மாநாடு நடத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்களை மாநாட்டில் உட்கார வைத்த பெருமை திருமாவளவனையே சேரும் என்றும், இதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார் என்றும் தெரிவித்தார்.

மேலும், திமுக அரசுக்கு எதிராக எந்த தீர்மானமும் போடக்கூடாது என்றும், மத்திய அரசுக்கு எதிராக மட்டுமே அனைத்து தீர்மானங்களையும் போட வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருமாவளவனை கட்டாயப்படுத்தியுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.

அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva