பிடி கொடுக்காத தினகரன் - விழி பிதுங்கும் டெல்லி போலீஸ்
இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் டெல்லி போலீசாரிடம் ஆதாரங்கள் இருந்தும், தினகரன் கொஞ்சமும் பயமின்றி பேசி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இரட்டை இலை சின்னத்தை பெற ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், அதற்காக சுகேஷ் சந்திரசேகர் என்பவருக்கு ரூ.10 கோடியை முன்பணமாக தினகரன் தரப்பு கொடுத்துள்ளதாக எழுந்த புகாரில், டெல்லியில் கைது செய்யப்பட்ட அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரனை, நேற்று மதியம் விமானம் மூலம் போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர்.
அங்கிருந்து நேராக பெசண்ட்நகரில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு அவரை கொண்டு சென்று போலீசார் விசாரணை செய்தனர். அதன்பின், அடையாறில் உள்ள தினகரன் வீட்டிற்கு அழைத்து சென்று அவரிடமும், அவரது மனைவியிடமும் விசாரணை நடத்தினர். ஒருபக்கம், அவரது உதவியாளர் ஜனார்த்தனனிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
ஏற்கனவே 4 நாட்கள் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். முதலில் யாகேஷ் யார் எனத் தெரியவே கூறியவர், அதன் பின் அவர் ஒரு வழக்கறிஞர் என நினைத்துப் பேசினேன். ஆனால், இரட்டை இலை சின்னத்தை பெற அவரிடம் நான் பணம் கொடுக்கவில்லை எனக்கூறியதாக தெரிகிறது.
ஆனால், தினகரனின் உதவியாளர் ஜனார்த்தனனின் மூலமாகவே, சுகேஷுடன் தினகரன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் தற்போது டெல்லி போலீசாரிடம் இருக்கிறது. ஆனால், இதில் தனக்கு தொடர்பில்லை. நான் பணம் கொடுக்கவில்லை என தினகரன் தொடர்ந்து கூறிவருகிறாராம்.
எனவே, தினகரனுக்கு எதிராக வலுவான ஆதாரங்களை சேகரிக்கவே, தொடர்ந்து அவரிடமும், ஜனார்த்தனனிடமும் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் எனத் தெரிகிறது.