சனி, 21 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 21 செப்டம்பர் 2024 (13:30 IST)

நடிகைகளின் பின்னால் இருந்தவருக்கு துணை முதல்வர் பதவியா? உதயநிதியை விளாசிய செல்லூர் ராஜூ..!!

Udayanithi
நேற்று வரை நயன்தாரா, திரிஷா பின்னாடி இருந்தவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதாக உதயநிதி குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற அண்ணாவின் 116 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்ட விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இந்த மூன்றும் திமுகவுக்கு பொருந்துதோ இல்லையோ, அதிமுகவிற்கு பொருந்தும் என்று தெரிவித்தார். 
 
அண்ணாவின் கட்சியை, கொடியை, சின்னத்தை இன்றைக்கு உலகறிய செய்தவர் எம்.ஜி.ஆர் தான் என்ற செல்லூர் ராஜூ, அப்பேற்பட்டவரை கருணாநிதி கட்சியை விட்டு தூக்கி எரிந்தார் என்றும் கூறினார்.  திமுக இருக்கும் வரை அண்ணாவின் பெயரை மறைத்து விடும் என்பதால், எம்ஜிஆர் இந்த கட்சிக்கு அண்ணா திமுக என பெயர் வைத்தார் என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்தார். 
 
திமுகவில் இன்றைக்கு வாரிசு அரசியல் தான் உள்ளது என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு அப்படியா இருந்தது என்றும் கேள்வி எழுப்பினார்.  விலைவாசி உயர்வு, மின் கட்டணம் 3 முறை உயர்வு, பால் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, இவையெல்லாம் செய்து விட்டு தமிழகத்தில் பொம்மை ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது என்று செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சித்தார். 
 
பிறந்தால் கலைஞர் மகனாக பிறக்க வேண்டும் என்றும் அவரது பேரன் உதயநிதி ஸ்டாலின் நடிகைகளுடன் ஆடி பாடி இன்றைக்கு எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் உள்ளார் என்றும் அவர் தெரிவித்தார். இருப்பதிலே வாக்கு கம்மியாக உள்ள தொகுதியில் போட்டியிட்டு உதயநிதி வெற்றிபெற்றார் என்றும் சட்டமன்றத்தில் அவருக்கு முன் சீட்டு, ஆனால், எனக்கும் ராஜன் செல்லப்பாவுக்கும் கடைசி சீட்டு வழங்கியுள்ளார்கள் என்றும் கூறினார். 
 
நேற்று வரை நயன்தாரா, திரிஷா பின்னாடி இருந்தவருக்கு துணைமுதல்வர் பதவி வழங்கப்பட உள்ளது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சித்தார்.