1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 13 ஏப்ரல் 2024 (10:52 IST)

தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுப்பு..! திமுக வழக்கு..! நாளை மறுநாள் விசாரணை..!!

Highcourt Dmk
திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது.
 
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் பிரச்சாரங்களை தீவிரப்படுத்தி உள்ளன. எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் வகையில் விளம்பர பிரச்சார வீடியோக்களையும் அரசியல் கட்சிகள் வெளியிட்டு வருகின்றன.

விளம்பரங்களுக்கு தேர்தல் ஆணையத்திடம் முன் அனுமதி பெற வேண்டும். இந்நிலையில், திமுகவின் விளம்பரங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்க மறுப்பதாக கூறி திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 
 
தேர்தல் ஆணைய விதிகளின்படி தேர்தல் விளம்பரங்களுக்கு அனைத்து கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று விதி உள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார். அவ்வாறு அனுமதி கேட்கும் விளம்பரங்கள் தொடர்பான விண்ணப்பங்களை இரண்டு நாட்களில் பரீசிலித்து அனுமதி தர வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார்..
 
ஆனால் திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் ஆறு நாட்கள் வரை காலதாமதம் செய்து வருவதாகவும், ஒரு சில விளம்பரங்களை அற்ப காரணங்களை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையம் நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 
திமுகவின் விளம்பரங்கள் தொடர்பான முன் அனுமதி விண்ணப்பங்களை நிராகரித்த தமிழக தேர்தல் அதிகாரியின் உத்தரவுகளை ரத்து செய்து விளம்பரங்களை அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது.