கடலூரில் 9 பேருக்கு டெங்கு காய்ச்சல் – முன்னெச்சரிக்கை நடவடிக்கை முடுக்கம் !
கடலூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 9 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழைப் பெய்து வருகிறது. இதனால் தண்ணீர் தேங்கிய பல இடங்களில் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகியுள்ளது. இந்நிலையில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பீதி அதிகமாகியுள்ளது. மேலும் சாதாரண காய்ச்சலாலும் பலரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பீதி அதிகமாக உள்ளது. கடலூரில் உள்ள பல இடங்களில் அனுமதிக்கப்பட்ட பல நோயாளிகளின் ரத்த மாதிரிகளில் அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் கடலூர் அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கப் பட்டு வருகின்றன. மக்களிடையேயும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.