இதனால்தான் ஓ.பி.எஸ்-ஸோடு இணைந்து செயல்படவில்லை - தீபா கூறிய காரணம்
ஓ.பி.எஸ் தரப்போடு இணைந்து செயல்படாததற்கு ஜெ.வின் அண்ணன் மகள் தீபா காரணம் தெரிவித்துள்ளார்.
ஜெ.வின் மறைவிற்கு பின், சசிகலாவின் தலைமையை விரும்பாத பல அதிமுகவினர் ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவிடம் சென்று அவரை அரசியலுக்கு வரும்படி வற்புறுத்தினார். எனவே, விரைவில் அரசியலுக்கு வருவேன் என அவர் கூறிவந்தார்.
அதற்கிடையில், சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கிய பின், அவரோடு இணைந்து செயல்படப் போவதாக தீபா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆனால், அதன் பின் மௌனம் கடைபிடித்தார். எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பின், ஓ.பி.எஸ்-ஸோடு இணைந்து செயல்படுவது பற்றி எதுவும் கருத்து கூறாமல் அமைதியாக இருந்தார்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்பு வந்தவுடன், தன்னைத்தான் ஓ.பி.எஸ் அணி வேட்பாளரக அறிவிக்கும் என அவர் எதிர்பார்த்ததாக கூறப்பட்டது. ஆனால், ஓ.பி.எஸ் தரப்பு மதுசூதனனை வேட்பாளராக அறிவித்தது. இதில் தீபா அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.
எனவே, பிப்ரவரி 24ம் தேதி எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையை தொடங்கி, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார். அதன்படி அங்கு படகு சின்னத்தில் அவர் போட்டியிடுகிறார். தற்போது அந்த பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசும் போது “ஓ.பி.எஸ் அணியினருடன் நான் இணைந்து செயல்பாடாதது குறித்து என்னை பலரும் விமர்சிக்கிறார்கள். அவர்கள் அணியில் நான் ஏன் சேர வேண்டும்? அவர்களும் நீண்ட நாட்கள் சசிகலாவுடன் இருந்தவர்கள்தானே?” என கேள்வி எழுப்பினார். மேலும், அதனால்தான் ஓ.பி.எஸ் அணியில் நான் சேர வில்லை என அவர் தெரிவித்தார்.