ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (10:59 IST)

ஆம்ஸ்ட்ராங்க் குடும்பத்திற்கு ஆபத்து? மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு! - போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு!

சென்னையில் சமீபத்தில் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவராக இருந்து வந்தவர் வட சென்னையை சேர்ந்த ஆர்ம்ஸ்ட்ராங்க். சமீபத்தில் ஆம்ஸ்ட்ராங்க் நடுரோட்டில் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த கொலை சம்பவத்தில் ரவுடிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்ட நிலையில், 2 ரவுடிகள் என்கவுண்ட்டர் செய்யப்பட்டனர்.

 

இந்நிலையில் தற்போது ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்து கடிதம் ஒன்று வந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதில் ஆம்ஸ்ட்ராங்கின் குழந்தையை கடத்தி விடுவதுடன், குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் ஆம்ஸ்ட்ராங்க் குடும்பத்திற்கு காவல் பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.

 

மேலும் மர்ம கடிதத்தை அனுப்பியது யார் என்பது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங்க் கொலை சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்தே அந்த பகுதி மக்கள் மீண்டு வராத நிலையில் தற்போது அவரது குடும்பத்திற்கு வந்துள்ள கொலை மிரட்டல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K