வலுபெறும் ‘டானா’ புயல்; தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு..!
வங்க கடலில் தோன்றிய டானா புயல் வலுப்பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை தோன்றிய நிலையில், அது காற்றழுத்த மண்டலமாக மாறி, தற்போது புயலாக மாறி உள்ளது என்பதும் டானா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த புயல், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டானா புயல் காரணமாக குமரி கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிறுவி வருகிறது என்றும் இதனால் நாளை தமிழகத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை மாலை மற்றும் இரவு நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edited by Mahendran