திங்கள், 23 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 23 செப்டம்பர் 2024 (14:21 IST)

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

CV Shanmugam
தமிழக அரசையும், தமிழக முதல்வர் குறித்தும் அவதூறாக பேசிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்திற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
 
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் தேதி அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய, அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம், தமிழக அரசையும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினைப் பற்றியும் அவதூறாகப் பேசியதாக புகார் எழுந்தது. 
 
இது தொடர்பாக அரசு வழக்கறிஞர் டி. சுப்ரமணியம் சார்பில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதே சமயம் கடந்த மே 1 ஆம் தேதி கோட்டக்குப்பம் என்ற இடத்திலும் சி.வி. சண்முகம் இதேபோன்று அவதூறாகப் பேசி இருந்தார். இது தொடர்பாகவும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து இந்த இரு வழக்குகளும் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 
 
விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் விசாரணையை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், ‘மக்கள் பிரதிநிதியாக இருந்துகொண்டு எப்படி கொச்சையாக பேச முடிகிறது? என்று கேள்வி எழுப்பியது.
 
சி.வி.சண்முகம் பேசிய விஷயத்தின் சில பகுதிகளை படித்து பார்த்தபோது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது என்றும் இவ்வளவு மோசமான ஒரு பேச்சுக்காக சி.வி.சண்முகம் ஏன் மன்னிப்பு கேட்கக் கூடாது? என்றும் நீங்கள் செய்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
 
மேலும் இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என தெரிவித்த நீதிமன்றம், உங்கள் தவறை உணராவிடில், இந்த விசாரணையை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் என்று திட்டவட்டமாக கூறியது. இதனையடுத்து தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘எதிர்காலத்தில் இதுபோன்று பேச மாட்டேன் என எழுதித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு, உரிய பதில்களை பெற்று தருவதாக  சி.வி.சண்முகம் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

 
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து அவதூறாக பேசிய வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று சி.வி சண்முகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.