வீட்டின் முன் குவிந்த அதிமுக தொண்டர்கள்.. செங்கோட்டையன் கொடுத்த விளக்கம்..!
முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் வீட்டின் முன் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் குவிந்துள்ள நிலையில், அதற்கு அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், குப்பம் பாளையத்தில் உள்ள அமைச்சர் செங்கோட்டையன் வீட்டின் முன் இன்று காலை முதல் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் குவிந்து வருகின்றனர். இது குறித்து அவர் கூறிய போது, "நான் கோவை மாவட்டம், போரூர் அருகே உள்ள பட்டீஸ்வரர் கோயிலுக்கு சென்று இருந்தேன். அந்த பிரசாதத்தை வாங்குவதற்காக தான் தொண்டர்கள், நிர்வாகிகள் குவிந்துள்ளனர். மற்றபடி வேறு ஒன்றும் இல்லை," என்று தெரிவித்தார்.
மேலும், "நான் யாரையும் ஆலோசனைக்கு அழைக்கவில்லை, எந்த ஆலோசனை கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை," என்றும் கூறினார். ஆனால், அதே நேரத்தில், நாளை அந்தியூரில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து ஆலோசனை செய்யவே, சில நிர்வாகிகள் எனது வீட்டிற்கு வந்துள்ளனர். மற்றபடி வேறு ஒன்றும் இல்லை," என்று அவர் கூறினார்.
இந்த நிலையில், அதிமுக நிர்வாகிகள் சிலர் செங்கோட்டையன் வீட்டிற்கு வந்து அவரை சந்தித்து பேசி விட்டு கிளம்பி சென்றதாகவும், இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே, அதிமுகவிலிருந்து சசிகலா, டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோர் பிரிந்து சென்ற நிலையில், செங்கோட்டையன் என்ன முடிவு எடுப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Edited by Mahendran