திங்கள், 23 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 23 செப்டம்பர் 2024 (20:01 IST)

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

Aquest
ஸ்ரீரங்கத்தில் காவலரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி ஜம்புகேஸ்வரனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். 
 
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் தலைவெட்டி சந்துரு (எ) சந்திரமோகன். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் ரயில்வே பாலம் பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து,  பிரபல ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ், அவரது அண்ணன் சரவணன் உள்ளிட்டோரை கைது செய்தனர். 
 
ஜாமீனில் வெளியே வந்த ஆட்டுக்குட்டி சுரேஷ், தனது மனைவி ராகினியுடன் நவல்பட்டு பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது 3 இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், சுரேஷ் ஓட்டி வந்த வாகனத்தின் மீது மோதினர். இதில் சுரேஷ் அவரது மனைவி ராகினி இருவரும் கீழே விழுந்தனர். 
 
பின்னர், 5 பேர் சூழ்ந்து கொண்டு, சுரேஷை சரமாரியாக வெட்டினர். தடுக்கச் சென்ற அவரது மனைவி ராகினிக்கும் காலில் வெட்டு விழுந்தது. வெட்டுப்பட்ட சுரேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைதானவர்களில் ஜம்புகேஸ்வரன் என்ற ரவுடி, போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றார். அப்போது காவலர் ஒருவரை, அரிவாளால் தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது ஜம்புகேஸ்வரனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.  ரவுடி ஜம்புகேஸ்வரனால் வெட்டப்பட்ட காவலர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, விசாரணைக்காக ஜம்பு என்கிற ஜம்புகேஸ்வரனை அழைத்து செல்லும் போது காவல்துறையிரை தாக்கி விட்டு அவர் தப்ப முயன்றார் என்றும் அதனால் தற்காப்பிற்காக காவல்துறையினர் அவரை இடது காலில் சுட்டு பிடித்தனர் என்றும் விளக்கம் அளித்தார்.

 
தற்போது கைது செய்யப்பட்ட ஜம்பு மீது 15 வழக்குகள் உள்ளன என்று அவர் கூறினார் இது தொடர்பாக ஸ்ரீரங்கம் ஆர்.டி.ஒ விசாரணை நடைபெறும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தெரிவித்தார்.