1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (10:50 IST)

வேரோடு வெட்டி வீழ்ந்த மரம்; கதறி இறந்த பறவைகள்! – கண் கலங்க செய்யும் வீடியோ!

Crows
நிறைய பறவைகள் தங்கியிருந்த மரம் ஒன்று வேரோடு வெட்டி வீழ்த்தப்பட்டு பறவைகள் இறந்துபோன வீடியோ வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பெரும் பேரிடர்களை சந்தித்து வரும் நிலையில், மறுபுறம் இயற்கையை அழிக்கும் செயல்களும் தொடர்ந்து நடந்து வருகிறது. முக்கியமாக இயற்கையை பேணுவதில் முக்கியமான காரணியாக விளங்கும் பறவைகள், விலங்குகள் பல தங்கள் வாழ்விடத்தை இழந்து தவிக்கும் சூழலும் உள்ளது.

தற்போது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு பெரிய மரத்தில் நிறைய காகங்கள் கூடு கட்டி வாழ்ந்து வந்துள்ளன. அந்த மரத்தை பறவைகளை வெளியேற்றாமலே வெட்டியுள்ளனர்.

இதனால் மரம் அடியோடு சாய்க்கப்பட்டபோது காகங்கள் பல கத்தியபடி கூட்டமாக பறந்தன. மரம் வேகமாக சாய்ந்து விழுந்ததில் கூடுகளில் இருந்த பறவை குஞ்சுகளும், குஞ்சுகளை விட்டு பிரிய மனமில்லா காக்கைகளும் பரிதாபமாக உயிரிழந்தன. மரம் விழுந்த சாலையில் காகங்களும், காக்கை குஞ்சுகளும் இறந்து கிடக்கும் காட்சிகள் பார்ப்போர் கண்களை கலங்க வைப்பதாக உள்ளது.

இது இரக்கமற்ற செயல் என்றும், பிற உயிர்கள் மீது கருணையற்ற இந்த செயல் வேதனையை அளிப்பதாகவும் இயற்கை ஆர்வலர்கள் பலர் வேதனை தெரிவித்துள்ளனர். இது எந்த ஊரில் நடந்த சம்பவம் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.