கொள்ளையடிக்கும் சுங்கச்சாவடிகள் – உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு !
நெடுஞ்சாலைகளை முறையாகப் பராமரிக்காமல் சுங்கச்சாவடிகள் மக்களிடம் இருந்து சுங்கக் கட்டணங்களை மட்டும் வசூல் செய்து வருவது கண்டனத்துக்குரியது என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அருப்புக்கோட்டை சாலை கடந்த 2011ஆம் ஆண்டு முதல் நான்கு வழிச்சாலையாக உருமாற்றம் கொண்டது.. இதையடுத்து, இந்த நெருஞ்சாலையில் எலியார்பத்தி என்ற இடத்தில் சுங்கச் சாவடி அமைத்துக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நெடுஞ்சாலை முறையாகப் பராமரிக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருந்து பயணிகளுக்கு அசௌகரியத்தை அளிக்கிறது எனக் கூறப்படுகிறது. சுங்கச் சாவடி அமைத்து மக்களிடம் பராமரிப்புக் கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனம் சாலைப் பராமரிப்பில் மட்டும் மெத்தனம் காட்டுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதனால் இந்த சாலையை முறையாக சீரமைக்கும் வரை இந்தச் சுங்கச் சாவடியில் பயணிகளிடம் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தத் தடை விதிக்க வேண்டும் என அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க நிர்வாகி மகாலிங்கம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறைக்குக் கண்டனத்தைத் தெரிவித்தனர்.
மேலும் ‘ முறையாகப் பராமரிக்கப்படாத சாலைகள் ஏற்படும் விபத்துகளுக்கு காப்பீடு நிறுவனங்கள் இதுவரை காப்பீடு வழங்கி வருகின்றன. சாலைகளைப் பராமரிக்காமல் இருக்கும் சுங்கச் சாவடி நிறுவன்ங்களே இழப்பீடு வழங்க நேரிடும்’ எனத் தெரிவித்துள்ளனர், மேலும் இது சம்மந்தமாக உள்ள வழக்குகளை சிறப்பு அமர்வு அமைத்து விசாரிக்கப்படும் என தெரிவித்த நீதிபதிகள் வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை அடுத்த மாதம் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.