1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 3 ஜனவரி 2025 (10:21 IST)

அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய பெண்ணின் முன்ஜாமீன் மனு: நீதிபதி அதிரடி உத்தரவு..!

Minister Ponmudi
அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி வீசியதாக பாஜகவை சேர்ந்த பெண் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அவரது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மாதம் கனமழை பெய்த நிலையில் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு நிவாரண பணியை கண்காணிக்க அமைச்சர் பொன்முடி சென்ற போது, அவர் மீது சிலர் சேற்றை எடுத்து வீசினர். இது குறித்து பாஜகவை சேர்ந்த விஜயராணி என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.

அமைச்சர் மீது சேற்றை வீசிய சம்பவத்திற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சம்பவம் நடந்த இடத்தில் நான் இருந்தேன் என்பதற்காகவும், எதிர்க்கட்சியை சேர்ந்தவர் என்பதற்காகவும் என் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவுக்கு எதிராக வாதாடிய அரசு வக்கீல், மனுதாரர் பாஜகவை சேர்ந்தவர். இவர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவரும் இல்லை. அரசியல் உள்நோக்கத்துடன் இவரது தூண்டுதலின் பேரில், அமைச்சர், மாவட்ட கலெக்டர், எஸ்பி ஆகியோர் மீது சேறு வீசப்பட்டுள்ளது. எனவே, இவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதாடினார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விஜயராணியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



Edited by Mahendran