”பட்டியலின சமூகத்திற்கு வாய்ப்பளிக்கவில்லை”; மனு அளித்த அவனியாபுர மக்கள்; நீதிமன்றம் கறார் உத்தரவு!!
ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைத்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
10 வருடங்களாக விழாக்கமிட்டிக்கு தலைமை வகிக்கும் ஜல்லிக்கட்டு குழுவின் தலைவர், கணக்குகளை முறையாக சமர்ப்பிப்பதில்லை எனவும், தன்னிச்சையாக செயல்பட்டு முடிவுகளை எடுத்து வருகிறார் எனவும் அவனியாபுரத்தை சேர்ந்த பலரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளித்திருந்தனர்
மேலும், அந்த மனுவில், ”பட்டியலின சமூகத்தினருக்கு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் பங்கெடுக்க வாய்ப்பளிக்கப்படவில்லை. எனவே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கிராம மக்களின் அனைத்து சமூக பங்கெடுப்புடன் கூடிய விழாக்குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, ”ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில், மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர்,மாநகராட்சி ஆணையர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும்” என உத்தரவு பிறப்பித்துள்ளது.