கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவிவருகிறது – விஜயபாஸ்கர்!!
கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவிவருகிறது – விஜயபாஸ்கர்!!
கொரோனா எச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மாலை முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மாவட்ட எல்லைகள் மூடப்பட இருக்கின்றன. இதனால் நேற்று முதலே மக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு திரும்புவதால் கூட்டம் அலை மோதுகிறது. மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக பொருட்களை வாங்கி வருகின்றனர்.
மக்கள் வெளியேற கூடாது என்று அறிவித்துள்ள நிலையில் வீடற்ற, ஆதரவற்ற மக்களின் நிலை குறித்த கேள்வி எழுந்துள்ளது. தமிழக மக்களுக்கு நிவாரண பணிகளை அறிவித்துள்ள நிலையில் ஆதரவற்ற மக்களுக்கான ஏற்பாடுகளையும் அரசு செய்து வருகிறது.
மாவட்டங்கள் முழுவதும் பொது சமையற்கூடங்களை ஏற்படுத்தி அதன் மூலம் சூடான, சுகாதாரமான உணவை ஆதரவற்றோர்களுக்கு அவரவர் வாழும் இடங்களுக்கே சென்று வழங்க ஏற்பாடுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துரிதப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தொடரில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும், பல்வேறு நோய்கள் ஏற்கனவே இருந்தாலும் மதுரையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தொற்று நோயாளியின் உடல்நிலை ஆபத்தான நிலையில் உள்ளது. கொரோனவைத் தடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கொரோனா வைரஸுக்கு சிகிச்சை மேற்கொள்ளும் டாக்டர்கள், நர்ஸுகளுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.