1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj kiyan
Last Updated : வெள்ளி, 13 மார்ச் 2020 (15:59 IST)

கொரோனா வைரஸ்: ‘எத்தனை பேர் பாதிக்கப்பட்டாலும் சமாளிப்போம்’- மலேசிய அரசு

கொரோனா வைரஸ்: ‘எத்தனை பேர் பாதிக்கப்பட்டாலும் சமாளிப்போம்’- மலேசிய அரசு
மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், வெளி நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளாத, கிருமித் தொற்று உள்ளவர்களுடன் நேரடியாக தொடர்பில்லாத மலேசியர் ஒருவருக்கு கோவிட்-19 நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
 
இத்தகைய நிலையை ஸ்போரேடிக் (sporadic) என்று குறிப்பிடுகிறார்கள். இது கிருமித் தொற்று பரவி இருக்கும் அளவையும் தன்மையையும் குறிப்பிடுகிறது. இத்தகைய நிலை ஏற்படும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
 
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களை அடையாளம் காண்பதில் மலேசிய சுகாதார அமைச்சு தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளாத, கிருமித் தொற்று உள்ளவர்களுடன் நேரடியாக தொடர்பு இல்லாதவர்களுக்கு ஃப்ளூ காய்ச்சல், சுவாசத் தொற்று உள்ளதா என கண்காணிக்கப்பட்டு வருகிறது.
 
அண்மையில் இது தொடர்பாக 600 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதை மலேசிய சுகாதார அமைச்சின் தலைமை பொதுச் செயலர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
 
அக்குறிப்பிட்ட நபருக்கு எவ்வாறு கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டது என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், மலேசியர்கள் அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க முன்வர வேண்டும் என்றார்.
 
சுவாசத் தொற்றுள்ள மலேசியர்கள் எதிர்வரும் பள்ளி விடுமுறைக் காலத்தில் வெளிநாடுகளுக்கு மட்டுமல்லாமல், உள்நாட்டிலும் கூட பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
 
"கொரோனா நோயாளிகள் அதிகரித்தாலும் கவலையில்லை; மலேசியா தயாராக உள்ளது"
 
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை எந்தளவு அதிகரித்தாலும் அதை எதிர்கொள்ள மலேசிய அரசு தயாராக உள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் அதம் பாபா தெரிவித்துள்ளார்.
 
மலேசியாவில் உள்ள அரசு மருத்துவமனைகள் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளை கையாளும் திறன் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசு மருத்துவமனைகள் மிக அதிகபட்ச தயார் நிலையில் இருப்பதாக குறிப்பிட்ட அவர், மலேசியர்கள் கவலையோ பீதியோ கொள்ளத் தேவையில்லை என்றார்.
 
"மலேசியாவில் 12 மருத்துவமனைகளில் ஆய்வுக்கூடங்கள் உள்ளன. அம்மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும். மேலும் நாடு முழுவதும் 57 மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை கண்டறிவதற்கான வசதி உள்ளது," என்று டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.
 
சுங்கை பூலோ மருத்துவமனையில் ஒரே சமயத்தில் 772 நோயாளிகளை கையாள முடியும் என்றும், இம்மருத்துவமனையில் கோவிட் -19 சிகிச்சைக்காக பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
3 மாதம் ஊதியமற்ற விடுப்பு - மலேசிய ஏர்லைன்ஸ் அறிவிப்பு
 
கொரோனா கிருமித் தொற்றுப் பரவல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களை மூன்று மாதங்களுக்கு ஊதியமற்ற விடுமுறை எடுத்துக் கொள்ள வலியுறுத்தி உள்ளதாக மலேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
 
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்த விடுமுறைத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.
 
மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் 13 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர். ஏற்கெனவே மலிண்டோ, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகளைச் சமாளிக்க இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. மலிண்டோ ஏர்வேஸ் நிறுவனம் தனது ஊழியர்கள் 50 விழுக்காடு ஊதிய வெட்டை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என முன்பே அறிவித்துள்ளது.
 
மலேசிய ஏர்லைன்ஸ் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 1,600 விமானங்களை ரத்து செய்துள்ளது. இந்நிறுவனத்தின் MH370 விமானம் 6 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானது. அதேபோல் சில ஆண்டுகளுக்கு முன்பு MH17 விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனால் ஏற்பட்ட இழப்புகளில் இருந்து மீள அந்நிறுவனம் தத்தளித்து வரும் நிலையில், கொரோனா கிருமியும் தன் பங்குக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
 
12,000 முகக்கவசங்களை மலேசியாவுக்கு கடத்த முயன்ற இருவர் கைது.
 
இந்தோனீசியாவில் இருந்து 12 ஆயிரம் முகக்கவசங்களை மலேசியாவுக்கு கடத்த முயன்ற இரு நபர்கள் கைதாகினர். இருவரும் மலேசிய பிரஜைகள் ஆவர்.
 
மலேசியாவில் முகக்கவசங்கள் வேகமாக விற்பனையாகின்றன. இது குறித்து தகவலறிந்த குறிப்பிட்ட அந்த இரு நபர்களும் நேற்று முன்தினம் நாடு திரும்ப திட்டமிட்டனர்.
 
முன்னதாக இந்தோனீசிய சந்தையில் கிடைத்த முகக்கவசங்களை இருவரும் வாங்கிக் குவித்தனர். மேடான் அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்த இருவர் மீதும் விமான நிலைய அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
 
இதையடுத்து கோலாலம்பூர் செல்லவிருந்த இவர்களது பைகளையும் சோதனையிட்டனர். அப்போது ஆயிரக்கணக்கான முகக்கவசங்களை அடைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் இருவரையும் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டபோது மலேசியாவில் உள்ள குழந்தைகளை கொரோனா கிருமித் தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் முகக்கவசங்களை விநியோகிக்க இருப்பதாக இருவரும் தெரிவித்தனர்.
 
இதையடுத்து முகக்கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், தடுத்து வைக்கப்பட்ட இருவரும் நாடு கடத்தப்படுவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
சிங்கப்பூர் நிலவரம்
 
சிங்கப்பூரில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 178ஆக அதிகரித்துள்ளது.
 
இந்நிலையில் கிருமித் தொற்றுப் பரவல் கட்டுக்குள் இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிடும் திட்டம் ஏதும் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.
 
முன்னதாக கொரோனா கிருமித் தொற்று தொடர்பில் சிங்கப்பூர் அரசு சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் பரவியது. இந்நிலையில் சில கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சிங்கப்பூர் அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு நாட்டு மக்கள் தயாராக வேண்டும் என்றும் பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
 
தினந்தோறும் கிருமித் தொற்றால் சிலர் பாதிக்கப்பட்ட போதிலும், அது வேகமாகப் பரவவில்லை என்றும், அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளே கிருமிப் பரவலின் வேகத்தை கட்டுப்படுத்தி உள்ளது என்றும் தொலைக்காட்சி வழி நாட்டு மக்களிடம் உரையாற்றிய போது பிரதமர் லீ சியன் லூங் குறிப்பிட்டார்.
 
சிங்கப்பூரில் அனைத்து பள்ளிவாசல்களும் ஐந்து நாட்களுக்கு மூடப்படுகின்றன.
 
இதற்கிடையே சிங்கப்பூரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும் ஐந்து நாட்கள் மூடப்படுகின்றன. கிருமி நாசினிகள் மூலம் சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவே பள்ளி வாசல்கள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற சமய நிகழ்வு ஒன்றில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் புரூனே நாட்டைச் சேர்ந்த ஒருவர் பங்கேற்றார் என்றும், அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது என்றும் தெரிய வந்துள்ளது. அதே நிகழ்வில் பங்கேற்ற சிங்கப்பூரர்கள் சிலரும் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதியாகி உள்ளது.
 
இதையடுத்தே பள்ளிவாசல்களை சுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் தெரிவித்துள்ளது.
 
மேலும் பள்ளிவாசல்களில் நடத்தப்படும் சொற்பொழிவுகள், சமய வகுப்புகள், பள்ளிவாசல் சார்ந்த பாலர் பள்ளி வகுப்புகள் யாவும் மார்ச் 13 தொடங்கி, இரண்டு வாரங்களுக்கு ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.