செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (13:35 IST)

சண்டாளன் என சர்ச்சை பேச்சு..! சீமானுக்கு நெருக்கடி - வழக்கை விசாரிக்க அதிகாரி நியமனம்.!!

Seeman
விக்கிரவாண்டி தேர்தல் பரப்புரையின்போது, பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக சீமான் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க, விசாரணை அதிகாரியாக பட்டாபிராம் உதவி ஆணையர் சுரேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.  
 
சமீபத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன், தேர்தல் பரப்புரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறான பாடல் ஒன்றைப் பாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து புகார் எழுந்ததன் அடிப்படையில், திருச்சி மாவட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 
 
மேலும், இந்த வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காவல்துறைக்கு சவால் விடும் வகையில், சாட்டை துரைமுருகன் பாடிய பாடலை தானும் பாடுகிறேன்.. முடிந்தால் கைது செய்து பாருங்கள் என செய்தியாளர் சந்திப்பில் பாடிய சம்பவம் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது.  
 
இதையடுத்து சீமானுக்கு எதிராக சென்னை பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த அஜேஸ் என்பவர், கடந்த ஜூலை 16ஆம் தேதி பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாநில பட்டியலின ஆணையத்திற்கு அஜேஸ் புகாரளித்தார். 
 
இதையடுத்து இந்த புகாரைப் பரிசீலித்த பட்டியலின ஆணையம், பட்டாபிராம் காவல் நிலைய ஆய்வாளருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது. அதுமட்டுமின்றி, சீமான் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஆவடி காவல் ஆணையகரத்திற்கு எஸ்.சி, எஸ்.டி ஆணையம் உத்தரவிட்டது. 


அந்த உத்தரவைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கை விசாரிக்க, விசாரணை அதிகாரியாக பட்டாபிராம் காவல் நிலைய உதவி ஆணையர் சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.