புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 19 ஜனவரி 2020 (12:34 IST)

களைக்கட்டிய ரேக்ளா ரேஸ்: 500 மாட்டு வண்டிகள் பங்கேற்பு!

பொங்கலையொட்டி கோயம்புத்தூர் பகுதியில் நடைபெறும் ரேக்ளா பந்தயம் இன்று விமரிசையாக நடைபெற்று வருகிறது.

தமிழர் திருநாளான பொங்கலையொட்டி தமிழகம் முழுவதும் காளைகளை கொண்டு பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன. அந்த வகையில் மதுரை உள்ளிட்ட தென் தமிழக பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள், மற்ற பகுதிகளில் நடைபெறும் மஞ்சுவிரட்டு போட்டிகளை போல கொங்கு பகுதிகளில் நடைபெறும் மாட்டுவண்டி பந்தயமான ரேக்ளா ரேஸ் மிகவும் பிரபலமானது.

எட்டிமடையில் இன்று நடைபெறும் ரேக்ளா போட்டியில் 500 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டுள்ளன. 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் ஆகிய இரண்டு பிரிவுகளாக நடைபெறும் இந்த போட்டியில் முதல் பரிசாக வீட்டு மனையும், 2வது மற்றும் 3வது பரிசாக தங்க நாணயங்களும் வழங்கப்பட உள்ளன.

இந்த போட்டியை காண கோயம்புத்தூர், எட்டிமடை சுற்றுவட்டாரத்திலிருந்து மக்கள் பலர் ஆர்வமாக வருகை புரிந்துள்ளனர்.