வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 19 ஜனவரி 2020 (11:12 IST)

இலங்கைக்கு ஆயுதம் வாங்கி தர கூடாது: மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை!

இலங்கை ராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்க இந்திய அரசு நிதி வழங்குவதை நிறுத்துமாறு பாமக தலைவர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே – பிரதமர் மோடி சந்தித்த போது இருநாட்டு உறவுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. அப்போது பல்வேறு தீர்மானங்கள் இரு நாடுகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டன. அதை தொடர்ந்து இலங்கை ராணுவத்துக்கு தளவாடங்கள் வாங்க இந்தியா 50 மில்லியன் டாலர் நிதியாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு பாமக தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் ” இலங்கை ராணுவத்துக்கு பாதுகாப்பு கருவிகளை வாங்க 50 மில்லியன் டாலர் நிதி வழங்கப் படும் என்று இந்திய அரசு அறிவித்திருப்பது ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயல் ஆகும். இந்த நிதியை ஈழத்தமிழர்களை ஒடுக்குவதற்காக சிங்கள அரசு பயன்படுத்தும் ஆபத்து உள்ளது! ஈழத்தமிழர் நலன், தமிழக மீனவர்கள் பாதுகாப்பு குறித்து இந்தியாவுக்கு அளித்த உறுதியை இலங்கை காப்பாற்றவில்லை. ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர் படுகொலை குறித்த போர்க்குற்ற விசாரணைக்கும் இலங்கை ஒத்துழைக்கவில்லை. இத்தகைய சூழலில் இலங்கைக்கு பாதுகாப்பு கருவி வாங்க இந்தியா உதவ வேண்டிய தேவை என்ன?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் “ஈழத்தமிழர்கள் படுகொலை விவகாரத்தில் இலங்கை அரசு குற்றவாளி; தண்டிக்கப்பட வேண்டிய நாடு. அத்தகைய நாட்டுக்கு இந்தியா 50 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவது போர்க்குற்றத்திற்கான வெகுமதியாகவே அமையும். எனவே, இலங்கைக்கு இந்தியா எந்த உதவியும் வழங்கக் கூடாது!” என்று கோரிக்கையும் வைத்துள்ளார்.