வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 9 அக்டோபர் 2022 (15:16 IST)

’ஆட்டை நீதான் திருடுன..!’ சண்டை போட்ட விவசாயி சுட்டுக்கொலை! – கோவையில் பரபரப்பு!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் விவசாயிக்கும், ஆட்டை திருடியதாக கருதப்பட்டவருக்கும் நடந்த வாக்குவாதத்தில் விவசாயி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மேடூர் ரங்கராஜபுரத்தை சேர்ந்தவர் சின்னசாமி. மாந்தாரைக்காடு என்ற பகுதியில் இவர் பட்டி அமைத்து ஆடு மேய்த்து வந்துள்ளார். சமீபத்தில் ஆடு மேய்த்து பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்ற சின்னசாமி திரும்ப வந்து பார்த்தபோது ஆடுகளை காணவில்லை.

இதனால் மனமுடைந்த சின்னசாமி தனது உறவினர் அய்யசாமி என்பவரது வீட்டில் அவரோடு மது அருந்திக் கொண்டே இந்த ஆடுகள் திருட்டு போன சம்பவத்தை கூறியுள்ளார். அப்போது அய்யசாமி அப்பகுதியில் உள்ள ரஞ்சித்குமார் என்ற நபர் இதுபோன்ற ஆடு திருட்டு வேலைகளை செய்து வருவதாக அய்யசாமி கூறியுள்ளார்.


அந்த சமயம் சரியாக ரஞ்சித்குமார் அந்த பக்கம் வந்ததை பார்த்த சின்னசாமி, அவர்தான் தன் ஆடுகளை திருடிவிட்டதாக ரஞ்சித்குமாருடன் அடிதடியில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அங்கிருந்தவர்கள் அவர்களை தடுத்து அனுப்பி வைத்துள்ளனர்.

தன்னை தாக்கியதால் சின்னசாமி மீது ஆத்திரத்தில் இருந்த ரஞ்சித்குமார் தன் வீட்டில் வைத்திருந்த வேட்டை துப்பாக்கியை கொண்டு வந்து சின்னசாமியை சுட்டுள்ளார். அதில் சின்னசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் ரஞ்சித்குமாரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited By: Prasanth.K