ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 24 ஜூன் 2024 (13:15 IST)

முதல்வர் ஸ்டாலினை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்..! ஜெயக்குமார் வலியுறுத்தல்..!!

Jayakumar
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணம் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினை  சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று அதிமுக  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
 
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 57 பேர் பலியான சம்பவத்தை கண்டித்து  அதிமுக சார்பில் தமிழக முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
 
அதன்படி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கள்ளச் சாராய மரணங்களை கண்டித்து  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது திமுக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். 
 
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், மெத்தனால் கடத்தல் இரு மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் நிகழ்வாக உள்ளது என்றும் இதை சிபிசிஐடியால் எப்படி விசாரிக்க முடியும் என்றும் அதனால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
 
மேலும் கள்ளச் சாயம் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் ஆணையம்,  ஒரு கண்துடைப்பு ஆணையம் என்று விமர்சித்தார். இந்த கமிஷனின் நடவடிக்கைகள் கள்ளச்சாராய மரண விவகாரத்தை நீர்த்துபோகச் செய்யும் என்று அவர் தெரிவித்தார்.

 
மக்கள் பிரச்சினைகளை சட்டப் பேரவையில் தான் விவாதிக்க முடியும் என்றும் ஆனால் இந்த அரசு சட்டப்பேரவையில் விவாதிக்க தயங்குகிறது என்றும் அவர் கூறினார். எனவே கள்ளச்சாராய மரண விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.