ஆயுத பூஜைக்கு தியேட்டர் திறக்கப்படாது! – முதல்வரால் உரிமையாளர்கள் கவலை
தமிழகத்தில் திரையரங்குகளை ஆயுத பூஜை முதலாக திறக்க அனுமதி கோரிய நிலையில் ஆயுத பூஜை அன்று திரையரங்குகள் திறக்கப்படாது என்று தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு பல்வேறு தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்களும் திறக்கப்பட்டுவிட்ட நிலையில் திரையரங்குகள் திறக்க இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை.
இதுகுறித்து தொடர்ந்து சினிமா துறையினரும், திரையரங்க உரிமையாளர்களும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது வரவிருக்கும் ஆயுத பூஜை அன்று திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டிருந்தனர். இதுகுறித்து முதல்வர் ஆலோசனை செய்து முடிவெடுப்பார் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது குறித்து வரும் 28ம் தேதி சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் முன்னதாக 25ம் தேதி தியேட்டர்கள் திறக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.