ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 3 மார்ச் 2024 (11:18 IST)

புதுவையில் பாஜக போட்டியிடும் என முதல்வர் ரெங்கசாமி அறிவிப்பு..! வேட்பாளர் தமிழிசை சௌந்தர்ராஜனா?

Tamilisai Rangasamy
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ரெங்கசாமி அறிவித்த நிலையில் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



நாடாளுமன்ற தேர்தலுக்கு நாடே தயாராகி வரும் நிலையில் புதுச்சேரியில் பாஜக போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நிறைவடையாமல் இருந்து வந்தது. 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக (6), என்.ஆர் காங்கிரஸ் (10) இணைந்து ஆட்சியமைத்தனர். அதன்படி என்.ஆர்.காங்கிரஸ் ரெங்கசாமி முதலமைச்சராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடுமா? பாஜக போட்டியிடுமா? என்ற கேள்வி தொடர்ந்து வந்தது. தற்போது தெலுங்கானா மற்றும் புதுச்சேரிக்கு துணை நிலை ஆளுனராக உள்ள முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் நீண்ட காலமாகவே எம்.பி சீட்டுக்காக காய்களை நகர்த்தி வருகிறார்.


சமீபத்தில் ஒரு பேட்டியில் கூட, தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது ஆண்டவன் கையிலும், ஆள்பவர் கையிலும் உள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது ஆள்பவர் பாஜகவுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார். புதுச்சேரியில் பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியிலிரிந்து பாஜக போட்டியிடும் என்றும், என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்றும் முதல்வர் ரெங்கசாமி அறிவித்துள்ளார்.

வேட்பாளர் குறித்து கேட்டபோது அதை பாஜக தலைமை அறிவிக்கும் என கூறியுள்ளார். பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை. ஆனால் இரண்டாவது கட்ட பட்டியலில் தமிழ்நாடு, புதுச்சேரி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழிசை சௌந்தர்ராஜன் புதுச்சேரியின் கவர்னராக அம்மக்களிடையே அறியப்பட்டவர் என்பதால் அவருக்கு புதுச்சேரி தொகுதியில் பாஜக சீட் வழங்க வாய்ப்புள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

Edit by Prasanth.K