தேர்தலில் நின்னு எம்.பி ஆகணும்னு ஆசை.. பிரதமர் மோடி கைலதான் இருக்கு?? – பூடகமாக சொன்ன தமிழிசை சௌந்தர்ராஜன்!
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தமிழிசை சௌந்தர்ராஜன் விரும்புவதாக கூறப்பட்டு வரும் நிலையில் சில பேட்டிகளில் அவரே தனது விருப்பத்தை மறைமுகமாக வெளிப்படுத்தியும் வருகிறார்.
தற்போது தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுனராக பதவி வகித்து வரும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், தனது அரசியல் பயண அனுபவங்கள் குறித்த புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தனது அரசியல் ஆர்வம் குறித்தும் வெளிப்படுத்தியுள்ளார்.
அதில் அவர் “எனது விருப்பம் மக்கள் பிரதிநிதியாக வேண்டும் என்பதுதான். அது ஆண்டவரிடமும், ஆண்டு கொண்டிருப்பவரிடமும் தான் உள்ளது. அவர்கள் உத்தரவை செயல்படுத்தும் காரியகர்த்தா நான். மக்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் வெளிப்படையாக கூட சொல்லவில்லை. ஆனால் அதற்குள் என்னை வெளி மாநிலத்தவள் என்று சிலர் பேசுகிறார்கள்.
இது என் தாய்வழி மண். அரவிந்தர், பாரதியார் வாழ்ந்த மண். அதனால் என்னை வெளிமாநிலத்தவள் என்று குறிப்பிடாதீர்கள்.
நான் மருத்துவர் தொழிலை இழந்துதான் அரசியலுக்கு வந்தேன். ஒன்றும் இல்லாமல் ஆதாயத்திற்காக அரசியலுக்கு வரவில்லை. அரசியலில் எனது 25 ஆண்டுகால பயணத்தை செப்டம்பரில் நிறைவு செய்யவுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
தான் மக்கள் பிரதிநிதியாவது ஆண்டவரிடம், ஆள்பவரிடமும் உள்ளதாக அவர் குறிப்பிட்டு பேசியது பாஜக மேலிடத்தையும், பிரதமரையும்தான் என அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.
Edit by Prasanth.K