அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஏன்? ரயில்வே துறை விளக்கம்..!
ரயில்வே தேர்வில் கலந்து கொள்ளும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில் ரயில்வே தேர்வு வாரியம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
அந்த விளக்கத்தில், ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பணிக்கான 2ஆம் கட்ட தேர்வு அனைவருக்கும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால், விண்ணப்பதாரர்களுக்கு இயன்றவரை அவர்களின் சொந்த மாநிலத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், சொந்த மாநிலத்தில் இடமில்லாத சூழ்நிலையில், அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், தேர்வு மையம் வெளியூர் அமைந்துள்ள தேர்வர்களுக்கு ரயிலில் இலவச பயண அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய ரயில்வேயில் 18,799 உதவி லோகோ பைலட் பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியானது. இந்தத் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 1,315 போட்டியாளர்கள் தேர்வாகியுள்ளனர். ஆனால், அவர்களில் பெரும்பாலானோருக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம் வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி, பல்வேறு தரப்புகளில் இருந்து கடும் எதிர்ப்புகளை கிளம்பியிருக்கிறது.
Edited by Siva