1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 3 மார்ச் 2020 (20:39 IST)

குடிநீர் கேன் உற்பத்தியாளர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் ஆலை உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்து வருவதை அடுத்து பொதுமக்கள் குடிநீருக்கு திண்டாடி வருகின்றனர். குறிப்பாக சென்னை மக்கள் கேன் குடிநீர் இல்லாமல் பெரும் அவதியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இது குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வேலை நிறுத்தம் செய்து மிரட்டி தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று குடிநீர் உற்பத்தியாளர்கள் நினைக்க கூடாது என்றும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
 
போராட்டம் மூலம் அரசுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என நினைப்பது தவறு என்றும் நிலத்தடியில் இருந்து நீர் எடுக்கும் அளவுக்கு ஏற்ப ஏன் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் இயற்கை வளமான தண்ணீரை இலவசமாக எடுக்க அரசு அனுமதிப்பது ஆச்சரியமாக இருப்பதாகவும், மூடப்பட்ட ஆலைகளை தற்காலிகமாக இயங்க அனுமதிப்பது தொடர்பாக உத்தரவு நாளை பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். 
 
இதனையடுத்து நாளை வெளிவரும் உத்தரவுக்கு பின்னரே கேன்குடிநீர் ஆலைகள் வேலைநிறுத்த போராட்டம் நீடிக்குமா? அல்லது முடிவுக்கு வருமா? என்பது தெரிய வரும்