செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 30 ஜூன் 2020 (15:38 IST)

தவணை முறையிலாவது பள்ளி கட்டணம் வசூலிக்கலாமா? – அரசிடம் கோரும் தனியார் பள்ளிகள்!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் தொடங்கப்படாத நிலையில் பள்ளி கட்டணத்தை தவணை முறையில் பெற அரசிடம் அனுமதி கேட்க தனியார் பள்ளிகள் சங்கம் ஆலோசித்து வருகிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருப்பதால் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டிருக்க வேண்டிய சூழலில் கொரோனா காரணத்தால் பள்ளி திறப்புகள் தள்ளி போவதால் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் பள்ளி கட்டணம் வசூலிக்க கூடாது என தமிழக அரசு விதித்துள்ள தடை குறித்து நீதிமன்றத்தில் தனியார் பள்ளிகள் சங்கம் மனு அளித்தன. அதன் மீதான விசாரணையில் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை கட்ட பெற்றோர்களை வற்புறுத்த கூடாது என்றும், அதே சமயம் பெற்றோர்கள் தாமாக முன் வந்து கல்வி கட்டணத்தை வழங்கும் பட்சத்தில் வாங்க தடையில்லை என்றும் விளக்கியுள்ளது.

மேலும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகள் சங்கத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 248 கோடியே 76 லட்சம் ரூபாயை கொண்டு ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவும் அறிவுறுத்தியுள்ள நீதிமன்றம், தவணை முறையில் கட்டணம் வசூல் செய்யலாமா என்பது குறித்து அரசின் அனுமதி பெறவும் அறிவுறுத்தியுள்ளது. இதனால் இதுகுறித்து தமிழக அரசிடம் அனுமதி கோருவது குறித்து தனியார் பள்ளிகள் சங்கம் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.