1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 12 மே 2022 (15:52 IST)

இலங்கை மக்களுக்காக அரிசி கொள்முதல் செய்வதற்கு தடையில்லை! – தமிழக அரசுக்கு நீதிமன்றம் அனுமதி!

இலங்கையில் உள்ள மக்களுக்கு உதவுவதற்காக அரிசி கொள்முதல் செய்யும் தமிழக அரசின் நடவடிக்கையை தடை செய்யக்கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை மக்களுக்கு உதவ தமிழக அரசு நிதி திரட்டி வரும் நிலையில் 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை கொள்முதல் செய்து அனுப்ப உள்ளதாக முதல்வர் அறிவித்தார்.

இதை எதிர்த்து திருவாரூரை சேர்ந்த நபர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் அரிசி கொள்முதலில் டெண்டர் முறை பின்பற்றப்படவில்லை என்றும், மேலும் இந்திய உணவுக்கழகத்தின் வழியாக கொள்முதல் செய்தால் இதைவிட குறைவான விலைக்கு தரமான அரிசியை கொள்முதல் செய்யமுடியும் என்றும், இதுகுறித்த விசாரணை முடியும்வரை அரிசி கொள்முதல் செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் அரசு தரப்பில், இந்திய உணவுக்கழகத்தின் அனுமதியோடே அரிசி கொள்முதல் செய்யப்படுவதாகவும், அவசர கொள்முதலின்போது டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டத்தில் விலக்கு உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

அதை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசு அரிசி கொள்முதல் செய்ய எந்த இடைக்கால தடை உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது.