ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (11:56 IST)

எஸ்வி சேகர் கைது? கமிஷ்னர் வரை போன விவகாரம்!

எஸ்வி சேகர் கைது விவகாரம் தொடர்பாகச் சட்ட ஆலோசனை கேட்டுள்ளேன் என சென்னை போலீஸ் கமிஷ்னர் தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில் அதிமுக கொடி அதில் இருந்து அண்ணாவின் படத்தை நீக்கவேண்டும் என்றும் எஸ்வி சேகர் விமர்சனம் செய்தது சர்ச்சைகளைக் கிளப்பியது. அதனை அடுத்து அதிமுக எம்எல்ஏவாக இருந்த போது வாங்கிய சம்பளத்தை எஸ்வி சேகர் திருப்பித் தருவாரா? என அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.  
 
இந்நிலையில் எஸ்வி சேகர் - ஜெயக்குமார் மோதல் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ’எஸ்வி சேகர் ஏதாவது பேசி விட்டு வழக்கு என்று வந்தால் ஓடி ஒளிந்து கொள்வார் என்றும், அதனால் அவர் கேட்டதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார். 
 
மேலும் அது குறித்து பேசிய முதல்வர் ‘எஸ் வி சேகர் பாஜகவுல இருக்காரா? மோடி இந்தியாவின் பிரதமரா வரணும்னு நாங்க எல்லாரும் ஊர் ஊரா போய் ஓட்டு கேட்டோம். அவர் எங்காச்சும் பிரச்சாரம் பண்ணாரா?. அவருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை’ எனக் கூறினார். 
 
இந்நிலையில் முதல்வர் மற்றும் அதிமுகவினர் கருத்துக்குப் பதிலளிக்கும் விதமாக நடிகர் எஸ்வி சேகர் மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டார்.  அதில் ‘நான் ஓடி ஒளிபவன் இல்லை. என்னை எல்லோரும் பிராமன சத்ரியன் என்பார்கள். எனக்கு ஜான் பாண்டியன் முதல் நிறைய பேர் நண்ப்ர்களாக உள்ளனர். ஓட்டுக்கேட்க வரவில்லை என சொல்கிறார்கள். என்னைக் கூப்பிட்டால் வரப்போகிறேன்.  
யாரோ முகம் தெரியாத ஒருவர் ஓட்டுக் கேட்க நான் நோட்டீஸ் கொடுத்துக் கொண்டு இருக்க முடியுமா? நான் என்ன செய்கிறேன் என்று மோடிக்கு தெரியும். நான் ஒரு போன் கால் போட்டு சொன்னாலே 5000 ஓட்டுகள் மாறும். அந்த அளவுக்கு எனக்கு செல்வாக்கு உள்ளது ’ எனக் கூறியுள்ளார். 
 
இந்நிலையில் மீண்டும் எஸ்.வி.சேகருக்கு பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் ஜெயகுமார். அவர் கூறியதாவது, எஸ்வி சேகர் தேசிய கொடியை அவமதித்ததும், முதல்வர் குறித்து அவதூறாக பேசியதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. இப்படியே அதிமுகவை அவமதிப்பதையும் ஏற்க முடியாது. அவர் நீண்ட காலமாக ஜெயிலுக்கு போக ஆசைப்படுகிறார். அவரது ஆசையை அதிமுக நிறைவேற்றும் என்று ஒரே போடாக போட்டுள்ளார். 
 
இந்நிலையில் அமைச்சரின் இந்த கருத்து குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வாலிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். பதில் அளித்த மகேஷ் குமார் அகர்வால், எஸ்வி சேகர் விவகாரம் தொடர்பாகச் சட்ட ஆலோசனை கேட்டுள்ளேன். கிடைத்தவுடன் சட்ட ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.