அவசரப்பட்டு லோன் ஆப்பில் கடன் வாங்காதீங்க..! – காவல் ஆணையர் எச்சரிக்கை!
பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு லோன் செயலிகளில் கடன்பெற வேண்டாம் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மக்கள் கைகளில் செல்போன் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், செல்போன் செயலிகள் வழியாக லோன் வழங்கும் கும்பலின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. சிறிய அளவிலான கடன் தொகைகளை வழங்கும் இந்த செயலிகள் பின்னர் அதற்கு அதிகமான வட்டி போட்டு வசூலிப்பதுடன், பணம் செலுத்தாவிட்டால் போன் செய்து மிரட்டுவது, கடன் பெற்றவரின் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்து ஆபாசமாக பேசுவது போன்ற மோசமான செயல்களையும் செய்கின்றனர்.
ஆனாலும் ஆவணங்கள் இன்றி சில நிமிடங்களில் உடனடியாக கடன் கிடைப்பதால் மக்கள் பலர் இதுபோன்ற செயலிகளை பயன்படுத்துகின்றனர். ஆன்லைன் லோன் மோசடி செயல்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டத்தில் பேசியுள்ள சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இதுபோன்ற கடன் செயலிகளில் கடன் பெற வேண்டாம் என்றும், யாராவது போன் செய்து ஆபாசமாகவோ, மிரட்டும் வகையிலோ பேசினால் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.