புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : சனி, 12 பிப்ரவரி 2022 (12:10 IST)

நோட்டாவும் இல்லை; விவி பேட் இயந்திரமும் இல்லை! – மாநில தேர்தல் ஆணையம்!

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நோட்டா வசதி மற்றும் விவி பேட் இயந்திரமும் இருக்காது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் எதிர்வரும் பிப்ரவரி 19ம் தேதி சனிக்கிழமையன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியான நிலையில் அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் வாக்களிக்கவில்லை என்று தெரிவிக்கும் நோட்டா ஓட்டு மற்றும் எந்த சின்னத்திற்கு வாக்களித்தோம் என பார்க்கும் விவி பேட் இயந்திரம் ஆகியவை இருக்காது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மாநில தேர்தல் ஆணையம் “இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுகின்ற தேர்தல்களில் மட்டும் மின்னணு வாக்கு இயந்திரங்களில் நோட்டா, விவி பேட் பயன்படுத்தப்படும். மாநில தேர்தல் ஆணையங்களால் நடத்தப்படும் உள்ளாட்சி தேர்தல்களில் நோட்டா கிடையாது. வி.வி., பேட் கருவியும் பயன்படுத்தப்படமாட்டாது. அந்த அடிப்படையில் தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நோட்டா, வி.வி., பேட் கிடையாது” என தெரிவித்துள்ளனர்.