அனுமதி மறுப்பு! ஈரோட்டில் தவெக பிரச்சாரத்திற்கு இடத்தை ஆய்வு செய்யும் செங்கோட்டையன்..
கரூர் சம்பவத்துக்கு பிறகு முதன்முறையாக விஜய் இன்று புதுச்சேரியில் பொதுக்கூட்டத்தை நடத்தி தனது தேர்தல் பரப்புரையை ஆரம்பித்தார். பத்து நிமிடங்களில் தனது பேச்சை முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார் விஜய். இதனை அடுத்து வரும் 16ஆம் தேதி ஈரோட்டில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்த இருக்கிறார். அந்த பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரி தவெக கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையின் தலைமையிலான நிர்வாகிகள் மனு அளித்திருந்தனர்.
ஈரோட்டில் அமைந்துள்ள பெருந்துறை சாலையில் ஒரு தனியார் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அங்கு உரிய அனுமதி பெற்ற உடன் அதற்கான பணிகள் நடைபெறும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். அதோடு ரோடு ஷோவும் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இதனை அடுத்து மாவட்ட எஸ்பி சுஜாதா அந்த இடத்தை நேரில் போய் ஆய்வு செய்தார்.
கூட்டம் வரும் அளவுக்கு அந்த இடம் போதுமானதாக இருக்காது, அதோடு பார்க்கிங் வசதியும் இல்லாத காரணத்தால் இங்கு கூட்டம் நடத்த அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியானது. அதற்கு மாற்றாக வேறொரு இடத்தை தேர்வு செய்ய தவெக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டனர். இந்த நிலையில் செங்கோட்டையின் தலைமையிலான தவெகவினர் தேசிய நெடுஞ்சாலை அருகே சரளை என்ற பகுதியில் பிரச்சாரத்திற்கு இடம் பார்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியானது.
இதற்கு ஏற்ப இன்று செங்கோட்டையன் தன்னுடைய கட்சியினருடன் ஈரோட்டில் உள்ள சில இடங்களை நேரில் ஆய்வு செய்து வருகிறார். கூடவே காவல் துறை அதிகாரிகளும் இருக்கின்றனர். கரூர் சம்பவத்துக்கு பிறகு இருந்தே விஜய் நடத்தும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்க காவல் துறை தயங்கி வருகின்றனர். அதனால் தவெக கட்சி சார்பாகவும் தேர்தல் பரப்புரையின் போது மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என தனது தொண்டர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.