1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 14 ஜனவரி 2023 (11:27 IST)

சிறுவனை அடித்துக் கொன்ற காவலர்கள்? 6 பேர் கைது! – சீர்திருத்த பள்ளியில் அதிர்ச்சி!

crime
செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்த 17 வயது சிறுவன் மரணமடைந்த வழக்கில் காவலர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகேயுள்ள கன்னடபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரியா. இவரது கணவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்து விட்டார். 3 மகன்கள், 3 மகள்கள் என 6 குழந்தைகளை வைத்திருக்கும் பிரியா கூலித்தொழில் செய்து வந்துள்ளார்.

இவரது மூத்த மகனான 17 வயது சிறுவன் கோகுல் ஸ்ரீ அந்த பகுதியில் சின்ன சின்ன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளான். சமிபத்தில் தாம்பரம் பகுதியில் ரயில்வே தண்டவாளம் அருகே இருக்கும் பேட்டரிகளை திருடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட கோகுல் ஸ்ரீ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடந்த டிசம்பர் 30ம் தேதி செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் அடைத்துள்ளனர்.

அடுத்த நாளே சீர்திருத்த இல்லத்திலிருந்து பிரியாவுக்கு போன் வந்துள்ளது. அதில் பேசிய சிறை அதிகாரிகள் கோகுல்ஸ்ரீ உடல்நலமற்று இருப்பதாகவும், பிரியாவை நேரில் வருமாறும் சொல்லியுள்ளனர். பிரியா நேரில் வருவதற்குள் மீண்டும் போன் செய்து கோகுல்ஸ்ரீ இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக பிரியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் கோகுல்ஸ்ரீயின் பிரேத பரிசோதனை முடிவில், ஒரே ஆயுதத்தை கொண்டு தொடர்ந்து தாக்கப்பட்டதால் கோகுல்ஸ்ரீ உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் செங்கல்பட்டு நகர போலீஸார் சிறை கண்காணிப்பாளர் மோகன் மற்றும் பணியில் இருந்த 5 காவலர்களை கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K