பிரபாகரன் எங்க இருக்கார்? – பழ.நெடுமாறனிடம் உளவுத்துறை விசாரணை!
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ.நெடுமாறன் சொன்ன நிலையில் அவரிடம் உளவுத்துறை விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கையில் தமிழ் ஈழ போரில் ஈடுபட்ட விடுதலை புலிகள் அமைப்பின் தலைவராக இருந்தவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். இலங்கையில் நடந்த போரில் கடந்த 2009ம் தேதி இவர் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. ஆனாலும் அவர் உயிருடன் இருப்பதாக அரசல்புரசலாக பேச்சு நிலவி வந்தது.
இந்நிலையில் தற்போது தமிழ் தேசியவாதி பழ.நெடுமாறன், பிரபாகரன் உயிருடன் உள்ளதாகவும், விரைவில் அவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்வார் என்றும் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இலங்கை ராணுவம் அவர் இறந்து விட்டதாக உறுதியாக கூறி வருகிறது.
எனினும் இந்த விஷயத்தை முழுமையாக அலட்சியப்படுத்திவிட முடியாது என்பதால் பிரபாகரன் குறித்த தகவல்களை மீண்டும் திரட்ட மத்திய உளவு பிரிவினர் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி தமிழ்நாடு க்யூ பிரிவு போலீஸார் மீண்டும் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
மேலும் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் பேசியது குறித்து அவரிடமும், அவரது ஆதரவாளர்களிடமும் விசாரணை நடத்த உளவு பிரிவினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பிரபாகரன் பெயர் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Edit by Prasanth.K