சாதிய பாடல்களை ஒளிபரப்ப கூடாது.! மீறினால் வழக்கு பாயும்.! காவல்துறை எச்சரிக்கை..!!
பேருந்துகளில் சாதி மற்றும் மதம் சார்ந்த பாடல்கள் மற்றும் வசனங்கள் ஒளிபரப்பக் கூடாது என பேருந்து உரிமையாளர்களுக்கு நெல்லை மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்கள் வழியாக இயங்கி வரும் பேருந்துகளில் ஜாதி மற்றும் மத ரீதியான பாடல்கள் ஒலிபரப்பப்படுவதன் மூலம் அதில் பயணம் செய்யும் பொதுமக்கள் இளைஞர்கள் பள்ளி மாணவர்களிடையே ஜாதி ரீதியான மோதல்கள் ஏற்பட்டு வருகிறது.
இதனை தடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் காவல் துணை ஆணையர் வெங்கடேசன் தலைமையில் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் 50-க்கும் மேற்பட்ட பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மத்தியில் பேசிய காவல் ஆணையர், நெல்லையில் பேருந்துகளில் சாதிய ரீதியான பாடல்களை ஒளிபரப்பக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சாதிய ரீதியான பாடல்களை ஒளிபரப்பினால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் பேருந்து நிலைய வளாகத்தில் ஏதாவது சண்டை சச்சரவுகள், சட்டவிரோத செயல்கள் மற்றும் மோதல் போக்குகள் ஏற்பட்டால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட வேண்டும் என்றும் காவல் துணை ஆணையர் வெங்கடேசன் கேட்டுக்கொண்டார்.