வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 31 ஜூலை 2018 (15:58 IST)

ரூ.85 லட்சம் மோசடி : தினகரனுக்கு எதிராக திரும்பும் புல்லட் பரிமளம்?

பண மோசடி செய்ததாக டிடிவி தினகரன் தரப்பு மீது புகார் கொடுக்க புல்லட் பரிமளம் தயாராகி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியை சேர்ந்தவர் புல்லட் பரிமளம். கடந்த ஞாயிற்றுக்கிழமை அடையாறு பகுதியில் உள்ள டிடிவி தினகரன் வீட்டின் முன்பு வந்த அவர் தினகரனின் கார் மீது பெட்ரோல் குண்டை வீசினார். அதில், கார் கண்ணாடிகள் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியது. மேலும், தினகரனின் கார் டிரைவர் பாண்டிதுரை மற்றும் போட்டோகிராபர் டார்வின் மற்றும் ஆட்டோ டிரைவர் என 3 பேர் படுகாயமைடந்தனர்.
 
போலீசாரின் விசாரணையில் அமமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட புல்லட் பரிமளம் என்பவர், தன்னை கட்சியில் இருந்து நீக்கியதற்காக தினகரனை பழி வாங்குவதற்காகவே ஆட்களை ஏவி இப்படி செய்திருக்கிறார் என்பது தெரியவந்தது. அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலிசார், தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர். 
 
இந்நிலையில், புல்லட் பரிமளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. காஞ்சிபுரத்தில் அதிமுக நிர்வாகியாக இருந்த புல்லட் பரிமளம், 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகும் ஒரு நாள் முன்பே 222 தொகுதிகளில் அதிமுக வெற்றி என காஞ்சிபுரம் முழுவதும் போர்டு வைத்தார். எனவே, அவரை கட்சியிலிருந்து ஜெயலலிதா நீக்கினார். 

 
அதன்பின், அதிமுக உடைந்த போது தினகரன் பக்கம் சென்றார் புல்லட் பரிமளம். கட்சிகாக பல லட்சங்களை அவர் செலவு செய்துள்ளார் எனத் தெரிகிறது. மேலும், கட்சியில் முக்கிய உயர் பதவியை அவருக்கு பெற்றுதர, தினகரனுக்கு நெருக்கமான சிலர் அவரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றதாக தெரிகிறது. அதுபோக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற தினகரன் கட்சி நிகழ்ச்சிகளுக்கும் புல்லட் பரிமளம் செலவு செய்துள்ளார்.
 
இந்நிலையில், தினகரனுக்கு நெருக்கமானவர் எனக்கூறி காஞ்சிபுரம் பகுதியில் பலரிடம் பண வசூல் செய்துள்ளார் புல்லாட் பரிமளம். இந்த தகவல் தினகரனுக்கு செல்ல சமீபத்தில் அவரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு தினகரனுக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு பணம் கிடைக்கவில்லை.இந்த கோபத்தில்தான் தினகரன் வாகனம் மீது பெட்ரோல் குண்டை வீச ஆட்களை அவர் அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது.
 
இந்நிலையில், தினகரன் தரப்பு அவரிடம் பணம் பெற்று மோசடி செய்துவிட்டதாக புகார் அளிக்கும் படி காவல்துறை அவரிடம் வலியுறுத்தி வருவதாகவும், விரைவில் அவர் புகார் அளிப்பார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.